பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்



341


இராமனின் பகைவனாகிய இராவணனை ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவனாகக் காட்டுகின்றான்.

அறுமுகச் செவ்வேள் பகைமேற்கொண்டு சென்ற சூரபதுமனும் ஒரு நிகரில் தலைவனே! மாட்சிமை மிக்குடைய ஒருவனையே பகைவனாகக் கொள்ள வேண்டும். மாட்சிமையில்லாதார் வலிய பகை மேற்கொண்டு வந்தாலும் ஒதுங்குதலும் ஒதுக்கித் தள்ளுதலும் பெருமை பொருத்திய ஆண்மைக்கு அழகேயாம். தம்மொடு பொருதற்குத் தகுதியில்லாதார் மாட்டுப் பொருதாது ஒதுங்குதல் கோழைத்தனமாகாது.

பகை மேற் கொள்ளும்பொழுது, மாட்சிமை மிக்க பகைவனிடத்திலேயே பகை கொள்ள வேண்டும். ஆயினும் தம்மின் வலியாரிடத்துப் பகை கொள்ளுதல் வாழும் நெறியன்று. அறிவின் ஆக்கமும் அன்று. தம்மின் வலியாரிடத்து மோதுதல், கல் மலையைக் கையினால் அடித்து நொறுக்கும் முயற்சி மேற் கொள்ளுதலை ஒத்தது. இதனால் கைக்கே வலி ஏற்படும். மலை உடையாது. ஆதலால், வலியாரோடு பகை கொள்ளுதல் தற்கொலைக்குச் சமம்.

தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றதனால் தம்மின் மெலியாரோடு பகை கொள்ளலாம் என்பது பொருளன்று. தம்மின் மெலியார்மேற் பகை கொள்ளுதல் ஆண்மைக்கும் மதிப்பிற்கும் இழுக்கைத் தரும். புகழைக் கொல்லும். இவற்றை இழந்த பின் வாழ்வதும் வாழ்வோ?

மெலியார் மேல் மோதுதல் நீதியுமன்று-நெறியுமன்று; ஆண்மையுமன்று-அழகுமன்று; புகழுமன்று. தம்மில் மெலியார் மேல் மோதுதல் மூலம் மோதுவார்க்கு இகழ்ச்சியும், மோதி அழிக்கப் பெற்ற மெலிய பகைவர்க்குப் புகழும் கிடைக்கும்.