பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வள்ளல் பாரியின் மீது முரணி மோதிய மூவர் பெயர்களும் தெரியாமலே மறைந்து போயின. ஆனால் போர்முறையில் மாண்ட பாரியின் புகழ் இன்றும் நிலவுகிறது.

பெருமன்னன் சேரமான் கணைக்காலிரும்பொறை, தகடூரை ஆண்ட வேளிர்குலத் தலைவன் அதியமானோடு போர் தொடுத்து வெற்றி பெற்றான். அதியமான் இறந்து பட்டான். தகடூர் அழிந்தது! ஆயினும், சேரனின் வெற்றி வாழ்த்தப் பெறவில்லை. அவ்வெற்றி தமிழக மக்களின் நினைவிலும் இல்லை. அதியமானின் புகழ் தகடூர் யாத்திரைக் காவியமாகப் பரிணமித்துள்ளது. அதியமான் “உளதாகும் சாக்காடு” பெற்றான். அவன் புகழ் நிலவுகிறது!

தம்மின் மெலியார்மேல் மறந்தும் பகை கொள்ளற்க! அஃது ஆண்மைக்கு இழுக்கு; புகழினைக் கெடுக்கும்! தம்மொடு மாறுபடும் மெலியாரை மனம் திருத்தி ஓம்புக! வாய்ப்பில்லையாயின் ஒதுங்குக! பகையும் நொதுமலுமின்றி ஒதுக்குக!

தம்மின் வலியார் மீதும் பகை கொள்ளற்க; தம்மின் மெலியார் மீதும் பகை கொள்ளற்க என்றதனால் தம்மை நிகர்த்த வலிமையுடையாரோடு பகை கொள்ளுதல் வரவேற்கப் பெற்றது. தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றதனால் கோழைத்தனம் வராதோ என்ற வினா எழலாம். தம்முடைய வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொண்டு உரியகாலம் வரும் பொழுது பகை கொள்ளுதல் விலக்கப்படவில்லை.

மாற்றான் வலியைத் தெரிந்து கொள்ளுதலே தம் வலியைப் பெருக்கி வளர்த்துக் கொள்வதற்குத்தான். தம் வலி பெருக்குதல் நாள்தோறும் நாடிச் செய்ய வேண்டிய கடமை. இதில் இடையீடோ, சோர்வோ தலைக்காணின் உள்ள வலிமையும் குன்றும்; தளர்ச்சி வந்தடையும். ஆதலால்,