பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
ஏன் திருக்குறள் பேரவை?

மனிதகுலத்தின் மேம்பாடு அறிவின் வழிப்பட்டது; ஆள்வினையின் வழியது. மனித குலத்தின் அமைதி, நீதியைச் சார்ந்தது. மனித குலத்தின் உயிர்ப்பு, விழுமிய கடவுள் நெறி. இத்தகு உயர்நெறியில் மனித குலத்தை உய்த்துச் செலுத்த ஒரு நூல் தேவை. அந்த நூல் எதுவாக இருக்கக்கூடும்? நூல்கள் காடுகள் போல் பல்கி உள்ளன. அவற்றுள் பல, நூலின் இலக்கணத்திற்கு மாறுபட்டவை. நூல்கள் மனக் கோட்டத்தைத் தவிர்க்க வேண்டியவை. ஆனால் இந்த நூல்களில் பெரும்பான்மையான நூல்கள் மனக் கோட்டத்தை உண்டாக்குவனவாக அமைந்துள்ளன. இலக்கியக் காட்டில் ஒரே ஒரு நூல் உயர்ந்து விளங்குகின்றது. சர் ஆல்பர்ட் சுவைட்சர், சிந்தைக்கினிய செவிக்கினிய வார்த்தைகளால் அந்த நூலைப் பாராட்டுகிறார். “உயர்ந்த நீதி இலக்கியங்களில் திருக்குறளே சிறந்தது. மனிதராகப் பிறந்தோர் பேசும் வேறு எம் மொழியிலும் திருக்குறளை யொப்ப ஒரு நூல் இல்லை” என்று அவர் பாராட்டியுள்ளார். திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கு என்ன சிறப்பு?

திருக்குறள் ஒரு முழுநூல்; வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கை நூல்; அறநூல்;