பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



31


5. இல்வாழ்க்கை

மனத்தூய்மையே அறம். மனத்தூய்மை, அன்பு செய்தல்; இன்புறுத்தல், வாழ்க்கையின் வாயிலாக அடையக் கூடியது. மேலும், மனத்தூய்மை உழைத்தல் வழியும் அடையலாம். இல்வாழ்க்கைக்குப் பொருள் இன்றியையாதது. இல்லற வாழ்க்கைக்குப் பொருள் செய்ய வேண்டியிருப்பதால் உழைத்தலைக் கட்டாயமாக்குதலால் அறத்தினைச் செய்தலுக்கு இல்வாழ்க்கை சிறப்புடைய முதன்மையான களம்.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.’

41

வாழ்க்கையின் நடுப்பகுதி இல்வாழ்க்கையே. இல்வாழ்க்கையில் பொருளியல் வாழ்க்கை தற்சார்புடையது. அதாவது இல்வாழ்க்கை வாழும் ஒவ்வொருவரும் பொருள் ஈட்டவேண்டும். (1) குமுகாயத்தில் வாழ்க்கையின் முதற்பகுதியாகிய கல்விகற்கும் பருவம் (2) இல்வாழ்க்கையில் முறையே வாழ்ந்து சிறந்தது பயிற்றலாகிய முதுமைக்காலை அந்தண வாழ்க்கையை மேற்கொண்டார். (3) பொருளியற்ற இயலாத கடமைகளையுடையவர்கள், ஆகிய இவர்களைப் பேணுதலும், இவர்தம் நெறிக்குத் துணை நிற்றலும் வேண்டும்.

1. கல்வி கற்கும் பருவத்தினர் ஊண், உடை இன்னபிற வாழ்க்கைத் தேவைகளுக்குக் கவலையுறாமல், கல்வி கற்கும்படி செய்தல்;

2. கல்வி கற்பதற்குரிய ஏந்துகள் (வசதிகள்) அமைத்துத்தருதல்;

3. சிறந்தது பயிற்றும் தவத்தினருக்கு ஊண், உடைகள் வழங்குதல்;