பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏன் திருக்குறள் பேரவை?



347


அவல நிலையிலிருந்து தமிழகத்தை-மனிதகுலத்தை மீட்பதற்குரிய ஒரேவழி திருக்குறளின் அறத்தை வாழ்வியலறமாக, வாழ்வியற் சட்டமாக ஏற்றுக் கொள்வதுதான்.

திருக்குறள் பேரவை இந்த முயற்சிக்காகத் தொடங்கப்பெறுகிறது. திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன; எண்ணிலா மொழி பெயர்ப்புகள் உள்ளன. திருக்குறள் இடம்பெறாத நூலகம் உலகில் இல்லை. திருக்குறளைத் தொட்டுக் காட்டாத சொற்பொழிவாளர் இல்லை! இப்பணிகளைச் செய்வது திருக்குறள் பேரவையின் பணியன்று. ஆனால், அவை செய்யக் கூடாதன என்று விலக்கப் பட்டனவும் அல்ல. திருக்குறள் பேரவையின் முதல்நோக்கம் திருக்குறளை முழுதாகக் கற்றலாகும். மேலும் திருக்குறட் கருத்தை, கொள்கைகளை, கோட்பாடுகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திச் சோதனைகள் செய்து வெற்றிபெற அறிஞர்கள் ஒரு சில நூறு பேர்களையாவது படைத்திடுவது என்பதாகும். வாழ்க்கையின் அனைத்துச் சிக்கல்களுக்கும் திருக்குறள்வழி தீர்வு காண்பது என்பது திருக்குறள் பேரவையின் குறிக்கோள். திருக்குறளைவிட உயர்ந்த நூலில்லை; திருவள்ளுவரை விடச் சிறந்த ஆசிரியரில்லை என்ற கருத்தில் பேரவை உறுதியாக இருக்கும். நமது சமுதாயம் வாழ்க்கைக்கு ஒத்துவராத-வர இயலாத அயல்வழி கருத்துக்களால் ஊடுருவப் பெற்று உள்ளீடழிந்து உருக்குலைந்து ‘அதிர்ஷ்டத்தை நம்பி ஆள்வினையை இழந்து, அறியாமையே அறிவு என மயங்கி, ஒருமைப்பாட்டை இழந்து களிப்பை நாடி, கடவுளை மறந்து தேவதைகளை நாடிச் செல்லும் இழிநிலை ஏற்பட்டது. இதற்கொரு முடிவுகட்டி எங்கும் கல்வி, அறிவின் வளர்ச்சி, ஆள்வினையின் ஆக்கம், ஒல்காப்பெரும் புகழ் ஒப்புரவுநெறி, குடிதழீஇய செங்கோல், உடம்பொடு உயிரனையராகக் கூடிவாழும் காதலர், உயிர்க்கு உறுகண் செய்யாத உயர்தவத்தோர், நடுவூரில் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் அனைய சமுதாய நெறி இவைகளை வளர்த்து