பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



351


பொருள்

வெகுளியுடையவர் நற்குணமுடைய சான்றோரல்லர். இதனால், சாபம் வழங்குகின்ற முனிவர்கள் சான்றோர் அல்லர் என்பது பெறப்படும்.

6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

34

மனத்தின்கண் தூய்மை யுடையவராக வாழ்தலே அறம். மனத்தின்கண் தூய்மையின்றிச் செய்யப் பெறும் எவையும் அறமாகா. அவை ஆரவாரத் தன்மையுடையன.

பொருள்

மனத்தின் கண் தூய்மை காத்தலே அறம் அஃதின்றிச் செய்யப் பெறுவன யாவும் அறமாகா.

7. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

49

அறம் என்று சிறப்பிக்கத் தக்கது இல்வாழ்க்கையே. அந்த இல்வாழ்க்கையும் பிறரால் பழிக்கத் தக்கதாக இல்லாதிருப்பின் மேலும் நல்லது.

பொருள்

இல்லறம், பொதுவாக அறமே. ஆயினும் அது பிறர் பழிக்கத் தக்கவாறில்லாமல் அமைந்தால்தான் நல்லது.

8. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

56

கற்பில் தன்னைக் காத்துக் - கொள்பவளும், தன் கணவனைக் கற்பு நிலையினின்று விழாதிருக்கும்படிப் பேணுபவளும் புகழைப் பேணுபவளும், சோர்விலாது பணிகளை மேற் கொள்பவளுமே சிறந்த பெண்.