பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



353



பொருள்

விருந்தோம்பி எஞ்சியதை உண்ணும் இயல்புடையவன் விளைநிலத்தின் விளைவு, பொது நலத்திற்குப் பயன்படுவதால், அவன் ஒரு கால், அந்த நிலத்தில் விதைக்கத் தவறினாலும் மற்றவர்கள் விதைக்க முன் வருவர்.

12. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

95

வணக்கமுடைமையும், இன்சொல் வழங்கும் இயல்புமே ஒருவனுக்குச் சிறந்த அணிகள். பிற அணிகள் அணிகளாகா!

பொருள்

தம்மினும் தாழ்ந்தவரிடத்தும் பணிவுடையவராய்ப் பழகுவதும், எப்போதும் இன்சொல் வழங்குதலும் வேண்டும்.

13. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

109

முன்பு உதவிய ஒருவர், தமக்குக் கொலையினை ஒத்த துன்பம் செய்தாராயினும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையினை எண்ணும் பொழுது பின் செய்த அக் கொடுந் துன்பம் கெடும்.

பொருள்

பழகிய ஒருவர் இன்று கொலையினை ஒத்த துன்பம் செய்தாலும், அவருக்கு எதிர்த் துன்பம் தராமல் அவர் முன்னொருகால் செய்த நன்மையினை எண்ணி அமைக! அவ்வழி, நன்றி மறத்தல் என்னும் குற்றம் வராதிருக்கும். எதிர்த்துன்பம் செய்யாமையால் அவரும் மனம் மாறித் துன்பம் செய்தலைத் தவிர்ப்பர்.

தி.ιν.23.