பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



14. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

118

நிறுவைக்கு முன் சமநிலையில் நின்று, பொருள்களை இட்டும் நிறுக்கும் பொழுது, பொருளின் அளவை வரையறுத்துக் காட்டும் துலாக்கோல் போல் ஒரு பக்கமாகச் சாராமல் நடுநிற்றலே சான்றோர்க்கு அழகு.

பொருள்

கருத்தறிவதற்கு முன்பு சமநிலையில் நின்று, இரு பாலாரின் கருத்தினை அறிந்த பிறகு, அக்கருத்தின் தரத்திற்கு ஏற்றவாறு நிற்பதே சான்றோர்க்கு அழகு. கருத்தின் தரத்தைத் தேரும் பொழுது ஒருபாற் சாய்தற்குக் காரணமாகிய இனம், மொழி, சமயம், கட்சி, சாதி, நட்பு ஆகியன வழிசார்தல் கூடாது.

15. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

325

பெருமை பாராட்டிக் கொள்ளாமல் அடக்கமாக நடந்து கொள்வது எல்லார்க்குமே நல்லது; அவ்வாறு அடங்கி ஒழுகுதல் செல்வர்க்கு மேலும் ஒரு செல்வம் ஆகும்!

பொருள்

“செல்வம் உடையம்யாம்” என்னும் செருக்கு, பெருமை பாராட்டிக் கொள்ளும் எழுச்சியைத் தரும். அவ்வெழுச்சி வழி ஆட்படின் நல்லோர் பகையும் வந்தமையும். வீணே புகழ்ந்து, செல்வத்தைக் கொள்ளை கொள்ளும் சிற்றினமும் வந்து சாரும். அவ்வழி செல்வம் கெடும். அதனால் செல்வமுடையவர்க்குப் பணிவுடைமை பெருஞ்செல்வமாகும்!