பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



4. அந்தணர் வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு ஊண், உடைகள் வழங்கி, அவர் தம் நெறியில் நின்றொழுகத் துணை நிற்றல்.

இதனால் வளரும் தலைமுறை கல்வி, அறிவு நலம் பெறும். மூத்தோர் உடல், உணர்வு வருந்தாமல் அமைதியாக வாழ்வதின் வாயிலாக நற்சிந்தனையாளர்களாகித் தவத்தால் வையகத்திற்கு இன்ப வாழ்க்கையையும் அவர்தம் மெய்யறிவால் (ஞானத்தால்) உயர்ந்த நூல்களையும் அருளிச் செய்வர். இத்தகு அறிஞர்கள்-மெய்யறிவாளர்களால் செய்யப்பெற்றவை அறநூல்கள். குமுகாயப் பொது அறம் தழைக்க நோற்கும் அந்தணர்கள் வாயிலாகக் குமுகாயம் இணக்கமும் மேம்பாடும் அடையும்.

‘துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.’

42

இல்வாழ்க்கை, கடமைகளுடையன. கடமைகளும், பொறுப்புகளும் இல்வாழ்க்கையின் தலைவனை, அறிவறிந்த ஆள்வினையாளனாக, பொருள்கள் 'பல படைத்துள்ளவனாக, ஒப்புரவு நெறிமேற் கொண்டொழுகுதல் வழி அவனை அற வாழ்க்கை மேற்கொண்டவனாக மாற்றி வளர்க்கிறது. கடமைகளும் பொறுப்புகளும் சுமைகள் அல்ல. மாந்தனை வளர்க்கும் வாயில்கள்!

1. ஏதாவது ஒரு காரணத்தால், உரியவர்களால் ஏற்றுக் கொள்ளப் பெறாது ஒதுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல்.

வாழ்க்கை, அகநிலை உணர்வுகளால் ஆயது. இஃது எல்லாருக்கும் ஒரே தன்மையதாக (மாதிரியாக) இயல்பாக அமைந்துவிடாது. இவ்வழி, குமுகாயத்தில் ஏற்படும் பிழைகள் ஏராளம், தந்தை-மகன் பிரிவு, கணவன்-மனைவி பிரிவு கூட வந்துவிடுகின்றன. இங்ஙணம் உரிமைச் சுற்றமுடையோரால் துறக்கப் பெற்வர்கள் வாழத் துணை செய்தல்.