பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொருள்

அறநெறி என்பது உரிமை பூண்டவர்களிடத்தில் ஒன்றிய அன்பு செலுத்துவது; பிறர்க்குரியவளின் பெண்மையை நயத்தல் மூலம், அவள், தன் கணவனுக்குச் செய்யும் அன்பில் இடையறவு ஏற்படுகிறது. தன் மனைவியிடத்தில் தான் காட்ட வேண்டிய அன்பிலும் குறையேற்படுகிறது. அதனால், அறநெறி மாறுபடும்!

19. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

160

பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் வெகுளாது பொறுத்தாற்றிக் கொள்பவர். உண்ணாது தவம் செய்வாரினும் உயர்ந்தவர்.

பொருள்

உண்ணாது நோற்பது பழக்கத்தால் எளிதில் அமையும். பிறர் கூறும் இன்னாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் எளிதில் அமையாத பண்பாடு. ஆதலின் முன், பின்னாக வைக்கப்பெற்றது.

20. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

168

நெஞ்சத்தே அழுக்காறு வராமல் காப்பதை ஒழுக்க நெறியாகக் கொள்க.

பொருள்

ஒழுக்கக் கேடுகள் அனைத்தும் அழுக்காற்றினின்றே விளைகின்றன. அதனால், அழுக்காறின்மையை ஒழுக்காறாக் கொள்க என்றார்.

21. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

177