பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



357



பிறர்பொருளைக் கவரும் வழி உளதாகும் ஆக்கத்தை விரும்பாது ஒழிக! அவ்வாறான ஆக்கம் பெருமை தருவ தன்று!

பொருள்

பிறர்பொருளைக் கவர்ந்து பெற்ற ஆக்கத்தால் கவர்ந்த குற்றத்திற்குரிய இம்மை, மறுமைத் தண்டனையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். கவர்ந்தவழி, அப்பொருளை இழந்தவர் இவரிடமிருந்து திரும்பக் கவர முயல்வர். அவ்வழியும் காவல் துன்பம் மிகும். ஆதலின் கவர்ந்த பொருள். துய்க்கப்படும் பொழுது இன்பப் பயனையும் பெருமையையும் தராது.

22. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

185

புறம் சொல்பவனின் நெஞ்சம் நன்மையுடையதல்ல என்பதனைப் புறங்கூறும் அவனது புன்மையினாலே அறியலாம்.

பொருள்

புறங்கூறுதல் அறநெறிக்கு மாறுபட்டது. அறத்தினைக் கூறுபவன் நேரிலேயே கூறலாம். புறம்கூற வேண்டியதில்லை. எனவே, புறங்கூறுபவன் நோக்கம் அறமன்று; பழி தூற்றுவதேயாம்!

23. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

197

சான்றோர், கேட்பார்க்கு விருப்பமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக. பயனற்ற சொற்களைச் சொல்லாதிருப்பது நல்லது.