பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



33


(அ) 1. இளைஞராயின் கல்வி கற்கத் துணை செய்தல்; அவர்கள் தாமே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் துணை செய்தல்.

2. தொழில் செய்யும் திறமுடையாருக்குத் தொழில் அமைத்துக் கொடுத்தல்.

3. தொழில் செய்யும் அகவையும், ஆற்றலும் இல்லாதாருக்கு ஊணும் உடையும் மருந்தும் முதலியன வழங்கிப் பாதுகாத்தல்.

(ஆ) உலகியலில் துய்க்கும் பொருள்கள் பலப்பல. இவற்றுள் தாம் ஒன்றைத் துய்த்து மகிழ்ந்து வாழும்பொழுது அவற்றைத் துய்க்கும் வாய்ப்பில்லாதவர்களுக்குத் துய்க்கும் வாய்ப்புக்களைப் படைத்துத் தருதல்.

இப்பணி உதவி, ஈதல், ஒப்புரவு முதலிய நெறிகளால் மட்டுமின்றி. “எல்லாருக்கும் எல்லாம்” என்ற ஒப்பற்ற குமுகாயம் அமைந்தாலே “துவ்வாதவர்கள்” இல்லாமற் போவர் என்பதும் கொள்ளத்தக்கது.

அதாவது, எந்த ஒன்றையும் தாம் மட்டுமே துய்க்காது மற்றவர்களுடன் கூடிக் கலந்து துய்த்தல். இதனால், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய குற்றங்கள் தோன்றா.

இ) துய்த்தற்கு இயலாத வறுமை வாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் துணைசெய்ய, “எல்லாருக்கும் எல்லாம்” என்ற குமுகாய அமைப்பை அடையக் கூட்டுறவின் வழி தொழிற்கழகங்களை நிறுவிப் பணிசெய்தல்.

(ஈ) யாதொரு பற்றுக்கோடும் இன்றி இறந்தார்க்கு இறுதிக் கடன்களைச் செய்தல்.

இறுதிக் கடன்களைச் செய்தல் சார்ந்தார், உரியார் கடமை. அங்ஙனம் யாருமில்லையாயின் குமுகாயத்தின் பொறுப்பேயாம். இதில் அரசுக்கு யாதொரு கடமையும்

தி.iv.3.