பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



377



81. சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும்
இல்ஆயின் வெல்லும் படை.

769

இழிவைத் தரும் சிறிய செயல்களும் மாறாப் பிணக்கும் வறுமையும் இல்லையானால் பகைவரைப் படை வென்று விடும்.

பொருள்

வெற்றிக்குப் பெரும் படைமட்டும் போதாது. படை வீரர்க்கு ஊதியம் வழங்க இயலா வறுமையும், ஆட்சி உறுப்புகளுக்கிடையே பிணக்கும், அவ்வழி சிறியன செய்தலும் இல்லா திருத்தல் வேண்டும்.

82. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து.

780

காத்த தலைவன், கண்ணீர் சொரிய எய்தும் மரணம், இரந்தும் பெறத்தக்க பெருமையுடையது.

பொருள்

பேணிக்காத்த தலைவன் வீழ்வதற்கு முன் வீழ்வது பெருமைக்குரியது. செய்ந்நன்றி அறமும் சேர்ந்ததாகும்.

83. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

783

நல்ல நூல்களைக் கற்குந்தோறும் இன்பம் பெருகுதல் போல, நற்குணமுடையோர் நட்பு இன்பத்தரும்.

பொருள்

நல்ல நூல்கள், பயில்தோறும் அறிவினைத் தந்து இன்பம் தரும். நல்லோர் நட்பு அன்பினைப் பெருக்கி இன்பம் தரும்.