பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



381



பொருள்

ஆற்றலுடையவரை இகழாதிருத்தல் தலைசிறந்த தற்காப்பு.

94. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்

942

முன் உண்ட உணவு செரித்ததறிந்து பின் உண்ணின் உடம்பினைப் பேண மருந்தென்று ஒன்று வேண்டியதில்லை.

பொருள்

உண்ட உணவு செரித்தபின் உண்டால் பிணி வராது.

95. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

953

வாய்மையில் வழுவாத நற்குடியில் பிறந்தார்க்கு முகமலர்ச்சி, ஈதல், இனியன கூறுதல், இகழாமை ஆகிய பண்புகள் உரிமையுடையன.

பொருள்

உயர்குடிப் பிறந்தாரின் இலக்கணம் கூறியது.

96. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

963

செல்வப் பெருக்கத்தில் பணியுடையராதல் வேண்டும். சிறுமையுடைய வறுமை வந்தடைந்த பொழுது தாழ்வு உணர்வில்லா உயர்வு மனப்பான்மை கொள்ளவேண்டும்.

பொருள்

செல்வப் பெருக்கத்தில் பணிவதால் பெருமையும் செல்வச் சுருக்கத்தில் உயர்வதால் பெருமையும் உண்டு.