பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



45



‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.’

55

தெய்வங்களைத் தொழமாட்டாள்; கணவனைத் தொழுது எழுவாள், அத்தகையவள், பெய்யெனப் பெய்யும் மழை.

இல்லாள், தெய்வங்களைத் தொழும் ஆவலைத் தணித்துக் கொள்ளுதல் வேண்டும். கடவுளைத் தொழுதல் தவறில்லை. அக்கடவுளையும் கூடக் கணவனோடியைந்து தொழுதலே சிறப்பு. கடவுள் வழிபாட்டில் குறைகள் கூறுதல் இல்லை. பேரறிவு, பேராற்றல் பெறுதல் கடவுள் வழிபாட்டின் நோக்கம்.

உறக்கத்தில் இல்லாளுக்கு உணர்வு இல்லை. உறக்கம் தெளிந்தவுடன், உணர்வுகள் திரும்பியவுடன் தன் தலைவனை, கணவனை நெஞ்சத்தால் தொழுது வாழ்த்தி எழுதல் வேண்டும். இதனால் மறவாது நினைந்து வாழும் திறன் வளரும். இங்ஙனம் வாழும் பெண் தன் கணவருக்கும் பெய்யென வேண்டும்போது பெய்து உறுதுணையாய் அமையும் மழை போல் துணையா யமைவாள்.

பெய்யென வேண்டும் பொழுது பெய்யும் மழையே பருவ மழை, பருவ மழையினாலேயே பயிர்கள் வளரும்.

‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’

56

இல்லாள் தனது கற்பொழுக்கத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்; தன்னுடைய கணவனையும் பேணிக் காத்தல் வேண்டும். தம் குடும்பத்திற்குரிய பெருமைமிக்க புகழையும் காப்பாற்ற வேண்டும். இந்தப் பணிகளைச் செய்தலுக்கேற்றவாறு சோர்விலாது இருத்தல் வேண்டும்.