பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தற்காத்தல்:

1. ஒரு பெண் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஒழுகித் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதாவது தன் கணவன் கண்டு மகிழ்தலுக்கு மட்டுமே மாலை நேரங்களில் ஆடைகளால், அணிகலன்களால் ஒப்பனை செய்து கொள்ளுதல் வேண்டும், மற்ற நேரங்களில் கவர்ச்சியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மற்ற வீடுகளுக்குச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பொழுதும் கவர்ச்சியான ஒப்பனைகள் இல்லாது எளிமையாகச் செல்லவேண்டும்.

2. இயன்றவரை கணவனுடனேயே நிகழ்ச்சிகளுக்கும் திருக்கோயிலுக்கும் செல்லவேண்டும்.

3. திருமணமாகாத - திருமணமாகியும் சீராக வாழாத ஆடவர்களிடம் பழகுதலைத் தவிர்த்தல் வேண்டும். இன்றியமையாமை ஏற்படின் தேவைக்குப் பேசி, விடுதல் வேண்டும்.

4. மற்றக் குடும்பத் தலைவர்களிடம் அவர்கள்தம் வாழ்க்கைத் துணைவிகளுடன் உள்ளபொழுதே அளவோடு பேசி அதுவும் அவள் வாயிலாக அவருடன் பேசும் முறையை மேற்கொள்க.

5. மற்ற ஆடவர்களின் நிறைகளை எண்ணுதல், பேசுதல் தவிர்க்கப்பெறல் வேண்டும். தம் கணவனுக்கு ஒப்பார் யாருமில்லை என்று கருத்துக் கொள்ளுதல் வேண்டும்.

6. தன் கணவன் யாதானும் ஒரு வகையில் நிறையுடையன் அல்லனாயினும் அதைக் குறையாக எண்ணுதல் கூடாது. நிறைவைத் தரத்தக்க முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். இதனால் தன் கற்புக்குப் பற்றுக் கோடாக உள்ள அன்பு வளரும்.