பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



47



தற்கொண்டாற் பேணல்

1. தன் கணவனின் அனைத்துத் திறன்களையும் வளர்த்துப் பேணவேண்டியவள் பெண்ணே.

2. கணவனின் காதல் இன்பப் பெட்டகமாக இருந்து அவன் நிறைவுபெறத் தக்க வகையில் கூடலும் ஊடலும் செய்து இன்புறுத்துவதன் வழியாகக் கணவனைப் பிறனில் விழையாமலும் பரத்தையின் வழிச் செல்லாமலும் பாதுகாப்பது பெண்ணின் கடமையேயாம். கணவனின் கற்புக்கு இல்லாளே பொறுப்பு.

3. கணவனின் உடல் நலமே மனையறத்திற்கு முதல். அதனை உரியவாறு பேணல்.

4. கணவன் அறிவிலும் ஆற்றலிலும் தொழில் திறனிலும் வளர்ந்து மனையற வாழ்க்கையைச் செப்பமாக அடையத்தக்க வகையில் இல்லாள், கணவனுக்குப் பற்றாக்குறைகளையும் - அரிப்புத் தொல்லைகளையும் கவலைகளையும் தராது வாழ்தல்.

தகைசான்ற சொற்காத்தல்

1. தன் குடும்பத்தின் பெருமைக்குரிய சொற்களைப் பாதுகாத்தல். அதாவது, குடும்பத்தைச் சீராக நடத்திப் புகழ்பெறுதல்.

2. குடும்பக் குறைகளை வெளியிற் சொல்லாமல் குடும்பத்தின் உயர்வினை என்றும் பாதுகாத்தல்.

சோர்வின்மை

1. குடும்பக் கடமைகளை நிறைவேற்றுதல்; சுறுசுறுப்பாய் இருத்தல்.