பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



51



யாமறிந்தவரையில் மக்கட் பேற்றினை ஒத்த சிறப்பான பேறு எதையும் அறிந்ததும் இல்லை; மதித்ததும் இல்லை.

உலகியலில் மக்கட்பேறே சிறப்புடையது; மதிப்புடையது. ‘அறிவறிந்த மக்கட் பேற்றிற்குக் கரணியமாக அமைந்த வாழ்க்கையில் ஈடுபட்ட காதலர்களின் காமக்களியாட்டத்தில் அறிவு தொழிற்படாது; காதற் களிப்பில் அறிவு தொழிற்படும். ஆதலால் காதலர்கள் கூடும் பொழுது இன்ன செயலை முடிக்க இன்ன தகுதியுடைய மக்கள் தேவை என்று எண்ணித் திட்டமிடல் வேண்டும் என்பது கருத்து.

‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’

62

எழு பிறப்புகளிலும் தீமை வந்தடையாது பழிகள் பெறாத மக்களைப் பெறின்.

எழுபிறப்பு:- இனிவரும் பிறப்புகள், எப்பிறப்பு என்பது உறுதிசெய்ய முடியாது. மானிடப்பிறப்பு படிமுறை (பரிணாம) வளர்ச்சியில், முடிவானது. இதில் தவறு செய்யின் படிமுறை வளர்ச்சியின் தொடக்க நிலைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் இருக்கலாம். எழுந்த பிறப்பு என்று பொருள் கொண்டு இப்பிறப்பில் என்று பொருள் கொண்டாலும் கருத்தில் முரண்பாடு இல்லை.

பழியிறங்கா மக்கள்

1. கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குதல்.

2. நல்லெண்ணமும் நம்பிக்கையும் பெற்றுக் குமுகாயத்தில் விளங்கித் தோன்றுதல்.

3. தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டுதல்.

4. தம் குடும்பத்தின் வழிவழிச் சொத்துகளையும், தந்தை ஈட்டிய சொத்துகளையும் நம்பி வாழாது. தம் முயற்சியையே நம்பி வாழ்தல்.