பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


5. தம் குடும்பத்தின் வழிவழிச் சொத்துக்களையும் தந்தை ஈட்டிய சொத்துக்களையும் பாதுகாத்து வளர்த்தல்.

‘தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.’

63

அறிந்தோர் தாம் பெற்ற மக்களைத் தம் பொருள் என்று கொண்டு போற்றுவர். தம் மக்கள் ஈட்டிய பொருளும் அவர் தம் செயல்வழி பெற்றோரை நோக்கிவரும்.

பொருள்: வாழ்க்கைக்குத் தப்பாது பயன்படக் கூடியவைகளே "பொருள்” என்று சிறப்பாகக் கொள்ளுதல்.

தம் காதல் வாழ்க்கையின் பயனாகத் தோன்றி, தம் வாழ்க்கையின் உறுப்பாக அமைந்து, தமது பணிகளைத் தொடர்ந்து செய்தலோடன்றி, முதுமைக் காலத்தில் துணையாய் அமையும் மக்களைப் "பொருள்” என்று கருதிப் போற்றுதல்.

அவர் பொருள்

1. தம் மக்கள் ஈட்டும் பொருள் பெற்றோரின் துய்ப்புக்குரியன.

2. மக்கள் செய்யும் எச்செயல்களையும் உலகம் பெற்றோருடன் இணைத்தே கண்டு சிறப்பிக்கும்.

3. ஆதலால், மக்கள் சிறப்புற வாழ்ந்தால் அந்தப் புகழும் பெற்றோரையே சாரும்.

‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.’

64

தம் மக்கள் சிறு கைகளால் குழப்பிய கூழ், அமிழ்தினும் இனியதாம்.

1. அமிழ்து சுவைமிக்க உணவு (புராணங்களின் வழி அமிழ்தம் வானோர் உணவு என்பர்).