பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



53


தூய்மைக் குறைவாகவும், சுவை குன்றிய சூழ்நிலையிலும் விளங்குவதாயினும் தம்மக்கள் சிறுகையிட்டுக் குழப்பிய உணவு, அமிழ்தமேயாம்.

2. குழந்தைகளை உண்பித்தலும், குழந்தைகளோடு உடனிருந்து உண்டுமகிழ்தலும், குழந்தைகள் தர உண்ணுதலும் தவிர்க்கக் கூடாதன.

‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.’

65

குழந்தைகளின் உடலைத் தீண்டி விளையாடி மகிழ்தல் உடலுக்கு இன்பம். அவர்தம் சொல் கேட்டல் செவிக்கு இன்பம்.

1. மக்களை எடுத்தும் அவர்களோடு விளையாடியும் மகிழ்தல் மூலம் பெற்றோர் பண்பாட்டில் வளர்கிறார்கள்; குழந்தைகளும் சிறப்பாக வளர்வர்.

2. மக்களின் சொற்களைக் கேட்டு மகிழ்தல் மூலம் குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையையும் சொல்லும் ஆற்றலையும் வளர்க்கலாம். கேட்கும் வாய்ப்பு ஏற்படும் இடத்தில் சொல்லவும் வாய்ப்பிருக்கும், அல்லவா?

‘குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.’

66

தம் மக்களின் மழலைச் சொற் கேளாதவர் குழலிசையும் யாழிசையும் இனிதென்பர்.

யாதொரு முரண்பாடும் இலாத மழலைச் சொல் கேட்பதில் இருபாலும் பயன் இருப்பதால் இசையினும் சிறந்தது.

‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.’

67