பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



57


ஆதலால் குமுகாயத்தில் நாம் ஒருவர் என்று கருதிக் குமுகாயத் தேவையே தம் தேவையாகக் கருதிடுக.

2. எப்பொருளையும் தேடுவதில், படைப்பதில் இலாப நோக்கின்றி குமுகாயத் தேவையை மையமாகக் கொண்டு தொழிற்படுக.

3. வையம் உண்ணாமல் உண்பதும், வையம் உடுத்தாமல் உடுப்பதும் அன்பின்மையின் விளைவே. ஆதலால் இதனை வருவித்த ஒருவரின் தனித்திறன்கள் குமுகாய வரலாற்று நிகழ்வுகள் தந்தவையேயாம். ஆதலால் தனியே எந்த ஒன்றிற்கும் ஒருவர் உரியராதல் இயலாது.

4. “என்பும் உரியர்” - ஒருவர் தமது அறிவாற்றலையும், உழைப்பையும் அவ்வழி படைக்கப்படும் பொருள்களையும் குமுகாயப் பொதுமையாக்குக.

5. பொதுமை நலத்திலிருந்து விலகிய தனிமை வளரக்கூடாது. அங்ஙனம் வளரின் அன்பு தோன்றி வளர்தலுக்குரிய ஊற்றுக் கண்கள் அடைபடும். ஆதலால் தன்னயத்தை மறந்திடுக. தற்பெருமையைத் தள்ளிவிடுக. தற் செருக்கினைத் துறந்திடுக. அன்பைத் தடுக்கும் அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் முதலியன தோன்றவும் அவ்வழி அன்பு கெடவும், உறவுகள் சீரழியவும் விடாமல் பொது நலம் நாடுக.

6. ஆதலால் அன்பினைக் காட்டுக. மற்றவர்களோடு இணைந்து பொதுமையைக் காண்க.

‘அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.’

73

உயிர், உடம்போடு இயைந்த தொடர்பு. இணைப்பு அன்போடு இயைந்த வழக்கென்ப.

1. உயிர் உடம்பினைத் துணையாகப் பெற்று வாழத் தொடங்குதல் அன்பு செய்தலுக்கேயாம்.