பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



59


வாழ்தலே வையகத்தில் இன்பத்தைத் தரும்; சிறப்பினைத் தரும். ஆதலால் அன்பு காட்டுதலைப் பழக்கங்களாக்குக! வழக்கங்களாக்குக.

அறத்தின் இயலையும் அன்பின் இயலையும் அறியாதவர்கள் அன்பு, அறத்திற்கு மட்டுமே சார்பு என்பர். அன்பின்மை போல் அன்பு, அறத்திற்கு எதிரான மறத்திற்கும் துணையேயாம்.

1. அன்பு, மற்றவர்களுக்குப் பயன்படும் அறச்செயல்களைச் செய்யத் துணையாகிறது.

2. கழனியில் பயிர் வளர, களை எடுத்தாக வேண்டும். அதுபோல அன்புக்குத் தொடர்பில்லாத அறத்திற்கு மாறான மறச் செயல்களையும் செய்ய வேண்டிவரும். ஏன்? அன்பிலாத-பயன்படாத செயல்களைச் செய்து சிலர், தாம் அழிவதோடன்றிக் குமுகாயத்திற்கும்(சமுதாயத்திற்கும்) தீமை செய்வர். இத்தகு தீமைகளைக் கண்டும் பொறுத்துக் கொள்ளுதல் அன்பு அல்ல. பொறுத்துக் கொள்ளாது அறிவுறுத்தல், கண்டித்தல், தண்டித்தல் முதலிய அன்பிலாமை போலத் தோற்றமளிக்கும் மறச் செயல்களை மேற்கொள்ளுக. இத்தகு மறச் செயல்கள் நேரிடையான அன்பு இல்லை; ஆனால், விளைவு அன்பேயாம்.

3. ஆதலால், குமுகாய நலனுக்குப் பயன்படாதவற்றைச் செய்து வீனே பாழ்பட வாழ்பவர்களைக் கண்டிப்பதில் தவற வேண்டாம். தேவைப்பட்டால் வன்முறையால்கூட திருத்தலாம். இச்செயல் தீயவரை அழிக்கும் நோக்குடையதாக இருத்தல் கூடாது. அன்பினால் அவர்களைத் திருத்தி நெறி நிற்கச் செய்யும் நோக்குடையதாக அமையவேண்டும்.