பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.’

77

எலும்பில்லாத புழுக்களை வெயில் எரிக்கும்; அதுபோல அன்பில்லாத உயிரை அறம் சுடும்.

1. வெயிலின் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் புழுக்கள் சுருண்டு விழுவதைக் காண்கின்றோம். அதுபோல அன்பிலாத உயிர்களை அறம் சுடும்.

2. அன்பு இல்லாமையே ஓர் உயிர்க்குறை. இக்குறைபாடு அறக்கடவுளின் சுடுதலுக்கு இலக்காகிறது. இங்கு அறம் முறைமை (நியதி)

அன்பு செய்யாமையாலும் உயிர்கள் கேடுற்று அழியும். அன்பு செய்யாத உயிர், வளர வாய்ப்பில்லை. அன்பு காட்டுதல் தவிர்க்க முடியாத கடமை. ஆதலால் அன்பு காட்டுதலைக் கடமையாகக் கொள்க. அன்பு காட்டுதல் அன்பு செய்யப்படுவாரின் வாழ்வுக்கு என்று எண்ணற்க. அஃது அன்பு செய்வாரை வாழ்விப்பது என்று அறிக.

அன்பு செய்யாதபோது ஆர்வம் இல்லை; முயற்சி இல்லை; பொருள் இல்லை; உறவு இல்லை; நட்பு இல்லை. அதனால் உயிர் இழிவுநிலை எய்திவிடும். ஆதலால் அன்பு காட்டுதலில் மற்றவர்கள் பயன் பெறுகின்றனர் என்று கருதாது, தாம் வளர அன்பு செய்க.

‘அன்பகத் தில்வா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.’

78

உள்ளத்தில் அன்பு இல்லாத வாழ்க்கை, பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர்த்தல் போலாம்.

உயிர் தழைத்து வளர்வது அன்பினாலேயாம். உள்ளத்தில் அன்பு உணர்வு பெறாதவர் வாழ்க்கை தளிர்க்க இயலாது; பூத்துக் குலுங்காது. ஒரு மரம் வளர, மரத்திலும் உயிர்ப்புக்குரிய - வளர்ச்சிக்குரிய பசுமை இருக்கவேண்டும்.