பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. காலம், இடம், பொருள், ஏவல் பெற்றிருந்தாலும் அன்பு இல்லையாயின் இயங்கா; தொழிற்படா; ஆதலால், காலம், இடம், பொருள், ஏவல் பயன்படத் தக்கவகையில் அன்பினைக் காட்டுக.

‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.’

80

அன்போடு பொருந்திய உடம்பே உயிருள்ள உடம்பாகும். அவ்வன்பு இல்லாதவர்களுடைய உடம்புகள் எலும்பைத் தோலால் மூடியனவேயாகும். அதாவது வெற்றுடம்புகளேயாம்.

உயிரின் இயற்கை, உயிர்ப்பு. உயிர்ப்பாவது இயக்கம். உயிரின் இயக்கத்திற்குக் கருவியே உடம்பு. உடலிடையுள்ள உயிரின் உயிர்ப்பு-இயக்கம் அன்புடையதாக அமையின் அவ்வுயிர்க்கும் பயன் உண்டு. மற்றவர்க்கும் பயனுண்டு. அன்பில்லையாயின் பயன் இல்லை. பயனில் வழி, பயனற்ற வெற்றுடம்பு. அதனால் "என்பு தோல் போர்த்த உடம்பு” என்றார்.

ஆதலால், உயிரின் உயிர்ப்பை அன்பாக்குக. உயிர்ப்பின் வழிச் செயற்படுக. சிந்தனைக்கு அன்பைப் பொருளாக்குக. சிந்தனை வழி வரும் செயற்பாட்டை அன்பின் வழியதாக்குக.

உடலில் உயிர் உள்ளது என்று துணிதலுக்குரிய அளவை அன்பொழுக்கமேயாகும். அன்பில்லாதவர்களின் உடலில் உயிர் இல்லை. ஆதலால், அவர்கள் எலும்பு தோல் போர்த்த போர்ப்புகள் என்று எண்ணப்பெறுவர்.

உயிர் உடலினை உடுத்துக் கொண்டதே அன்பு செய்தலுக்காகவும் அன்பினைப் பெறுதலுக்காகவுமேயாம். இதுவே இயற்கை விதி. உடலின் நோக்கம் நிறைவேறாத பொழுது பயனற்றதாகிறது. உலகில் வளர்ந்துள்ள தீமை,