பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



63


உடல்கொண்டு வாழ்வதையே பெரிதென்று எண்ணித் தன்னயப்பால் அன்பினைக் கொன்றும் வாழ்வதேயாம். இது தவறு. அன்பினைச் செய்யும் ஒழுக்க நிலையிலேயே உயிர் உள்ள வாழ்க்கை அமைந்திருக்கிறது.

9. விருந்தோம்பல்

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.’

81

கணவனும் மனைவியுமாக இல்லத்தின்கண் இருந்து பொருள்களைப் பேணி வாழ்வதெல்லாம் விருந்தினரைப் பேணுதலுக்கேயாம்.

விருந்து: புதியதாக அறிமுகம் ஆகியவர்கள்; அல்லது உறவு, சுற்றம் ஆகிய சார்புகள் இல்லாதவர்கள்.

அகமும் முகமும் மலர வரவேற்று, தேவையானவற்றைத் தந்து உபசரித்தல்.

நிலத்தை உழுது பயன்காணும் வேளாண்மை என்ற தொழிற் பெயரை விருந்தோம்புதலுக்குப் பொருத்திக் கூறியது, மனம் என்ற நிலத்தில் அன்பால் உழுது, அருள் என்னும் பயன் காண்பதால் என்பதறிக.

1. இவ்விருந்தோம்பல் தமது இல்லத்தின் பொருள் நிலைக்கேற்பவும், காலச் சூழ்நிலைகளுக்கேற்பவும் செய்தல் வேண்டும்.

2. விருந்தினர் - புதியவர் என்றாலும் தமக்கு அறிமுகமான வேறு ஒருவரின் பரிந்துரையுடன் விருந்தினராக ஏற்றுக்கொள்ளுதல் நல்லது.

3. அல்லது இடம் விட்டு இடம் பெயர்ந்து உலா வருதலுக்குரிய தெளிவான நோக்கம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து தெளிந்து ஏற்றுப் பேணுதல் வேண்டும்.