பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



65



செல்வம் வற்றாது தங்கியிருக்கும் என்பது கருத்து. திருமகள் குடியிருப்பாள் என்பது உருவகம்.

செல்வம் செலவழிப்பதற்குரிய வழிகளைப் பொறுத்துச் செல்வம் வளரும்; அல்லது அழியும்.

நல் விருந்து பேணுதல் மூலம் செல்வம் பயனுள்ள வழியில் அன்பை, ஆர்வத்தை, ஆள் வினையைத் தூண்டி இயக்கும் வழியில் செலவழிக்கப்படுவதால் செல்வம் குறையாது; வளரும்; தங்கும்.

அதோடு நல்விருந்தினர் சிந்தனையால், உணர்வால், செயலால் வாழ்விப்பார்கள். அதனாலும் செல்வம் தங்கும்.

‘வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.’

85

விருந்தினரைத் தமக்கு முன்பு உண்பித்து விட்டுப் பின்பு மிகுந்ததைத் தாம் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை என்பது கருத்து.

இது விருந்தோம்பும் பண்பின் திறத்தை எடுத்துக் கூற, உயர்வு நவிற்சியாகக் கூறியதெனக் கோடல் பிழையன்று. ஆயினும் நடை முறைக்கு வராதது என்று கொள்ளுதல் எதிர் காலத்தில் வளரும் செப்பத்தை மறுத்தலாகும்.

பயன்படுவார் நிலத்தில் பயன் கொள்வோரும் அறநெறிச் சான்றோரும் கூட, பயன் நோக்கி விதைக்கலாம் அல்லவா?

இத் திருக்குறளின் பயன், குமுகாயத்திடம் நம்பிக்கையை வளர்ப்பது ஆகும்.

‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.’

86

தி.iv.5