பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



67


ஆதலால், தேர்ந்து தெளிந்து தக்காரல்லாரைத் தவிர்த்தல் வேண்டும்.

‘பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.’

88

விருந்தினரைப் பேணி அவர்களுக்குச் சிறந்த உணவு படைத்தலை மேற்கொள்ளாதார் செல்வத்தை நிலையானதென்று கருதி - வருந்திப் பாதுகாத்து அச்செல்வத்தை இழந்த போது யாதொரு பற்றும் இல்லையே என்று நொந்து கூறுவர்.

செல்வத்தின் பயன் விருந்தோம்புதல். விருந்தோம்பும் பண்பு, செல்வத்தை இழக்கும் பொழுது உற்றுழி உதவும், துணை செய்யும் என்ற கருத்தை எதிர்மறையாக உணர்த்தியது.

வேள்வி - விருப்பமுடன் செய்வது வேள்வி என்றால் தீ வளர்க்கும் யாகம் என்று கொள்ளுதல் தமிழர் மரபன்று.

விருப்பமுடன் செய்யும் தொண்டு வேள்வியாகும். தமிழ் நெறியில் ஐவகை வேள்வியாவன: திருமணம் செய்வித்தல், விருந்தினரைப் பேணல், தெய்வத்திற்குப் படைத்தல், பேய்களுக்குப் படைத்தல், கொடை.

இந்த ஐவகை வேள்விகளையும் வாய்ப்பு ஏற்படும் பொழுதெல்லாம் விரும்பிச் செய்தால் செல்வம் பயன்படுகிறது என்பதாகும்.

‘உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.’

89

பொருள் பெற்றிருக்கும் காலத்திலும் வறுமையாவது விருந்தோம்பாமை.

இத்தகு மடமை அறியாதாரிடத்து உண்டு.

செல்வத்தின் பயன் இல்லாமையால் பொருளுடைமையும் வறுமையாயிற்று.