பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அறியாமை செல்வத்தையும் வறுமையாக்கும் என்பதால் செல்வம் பெற்ற அளவிலேயே பயன் இல்லை.

செல்வத்தின் பயன் அடையும் பொழுதே உடைமைக்குப் பொருள் தெரிகிறது.

விருந்தோம்புதல் மூலம் தக்கார் நட்பும் உறவும் கிடைப்பதால் என்றும் வாழ்தலுக்கு வழி உண்டு என்பது கருத்து.

‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.’

90

அனிச்சப் பூவை மோந்தவுடன் அது வாடிப்போம். அதுபோல விருந்தினர் முகம், வேறுபட்டு நோக்கும்பொழுது வாடும். விருந்தினர், வறுமையால் உந்தப்பட்டுப் பிழைப்புக் கருதி வருபவர் அல்லர். நாடு காணும் நோக்குடனும், மக்கள் மன்றத்திற்குப் பணி செய்யும் நோக்குடனும், திருத்தலப் பயண நோக்குடனும் பயணத்தில் வருபவரே விருந்தினராக வருபவராவர்.

ஆதலால், தகுதி மிகுதியும் உடையவரே விருந்தினர். அப்பூதியடிகள் இல்லத்திற்கு வந்த அப்பரடிகள் விருந்தினர்; ஒப்பு நோக்கி அறிக.

விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்றுப் பேணுதல் வேண்டும். எந்தவொரு காரணத்தினாலும் முகம் கடுகடுக்க அல்லது வேறுபட்டு விருந்தினரை நோக்கக் கூடாது.

விருந்தோம்புதலில் பரிமாறப்பெறும் உணவுப் பொருள்களை விடப் பேணும் (உபசரிக்கும்) பண்பே மிகுதியும் வேண்டற்பாலது.