பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



69



10. இனியவை கூறல்

‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.’

91

மெய்ப் பொருளையறிந்த சான்றோரின் வாய்ச்சொல் வஞ்சனை இல்லாதனவாய் அன்பு கலந்தனவாய் அமையும் இனிய சொற்களாகும்.

செம்பொருள் காண்பதாவது, நிலையில்லாதனவற்றையும் பயன் தராதனவற்றையும் நாடாது நிலையான இன்ப அன்பினையே நாடுவார் நெஞ்சம் அன்பிற்கனியும். பொய்ம்மையுடன் தொடர்பிலாது வாய்மையோடு தொடர்புடைய நெஞ்சம் அன்பில், - அருளில் பழுத்து விளங்கும். அதனால், அவர்கள் சொல்லும் சொற்கள் செவிப்புலனுக்கும் வாழ்க்கைக்கும் இனியனவாக அமையும்.

1. நாளும் ஒருமனப்பட்ட சிந்தனையுடன் செம் பொருளைச் சிந்தனை செய்க.

2. சிந்தனையிலும் செயலிலும் பொய்மையை நீக்குக.

3. அன்பு நெஞ்சத்தில் நனைந்த சொற்களையே கூறிப் பழகுக

‘அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்.’

92

ஒருவரைக் கண்ட அளவிலேயே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின் அகமலர்ந்த இனிய சொற்களைச் சொல்லுதல் ஒரு பொருளைக் கொடுத்தலைவிடச் சிறந்தது.

செவிப்புலனைவிடக் கட்புலனே காலத்தால் முந்தியும் எளிதிலும் கவர்ந்து ஈர்ப்பது. ஆதலால், முகமலர்ச்சியுடன் வரவேற்கப் பழகிக் கொள்ளவேண்டும். முகமலர்ச்சிக்குத் தடையான பிணக்கு, பகை, வெறுப்பு, அயலாந் தன்மை