பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடியோடு மறந்துவிட்டு நல்லவற்றை நாடிச் சொன்னால், செய்தால், தீமை தானே அகலும்; துன்பமும் தொலையும்.

3. சொற்கள் விளைவுகளுக்கு உரியன. ஆனாலும், சொல்லுக்குரிய பயன் விளைய வேண்டுமானால் தேர்ந்து இனிய சொற்களால் சொல்லவேண்டும். நல்லவை சொன்னாலும் அந்த நல்லவைகளையும் கூட இனிய சொற்களாலேயே சொல்லுதல் வேண்டும்.

4. சொல்லில் இனிமை தவறின், சொல்லால் நன்மை விளையாது.

‘நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.’

97

இனிய பண்பின் நீங்காத சொல், பிறர்க்கும் நன்மையைக் கொடுத்து, அங்ஙனம் சொல்பவருக்கும் இம்மையிலும் பொருள், புகழ் முதலியன தரும்; மறுமையிலும் இன்பம் தரும்.

1. சொல்லும் சொற்களைக் கேட்பதற்கு இனிமையாக அமைவதோடன்றி கேட்பவர்க்கு நன்மைகளையும் உண்டாக்க வேண்டுமென்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும்.

2. ஆதலால், சொல்லுபவருக்கும் கேட்பவருக்கும் நன்மையை உண்டாக்கும் இனிய சொற்களையே சொல்லப் பழகுதல் வேண்டும்.

3. இனிய சொல் என்று கருதி, நன்மை பயவாத சொற்களைச் சொல்லக்கூடாது. சொல்லுவது நன்மை தானே என்ற எண்ணத்தில் கேட்பதற்கு இனிமையாக இல்லாத சொற்களைச் சொல்லக் கூடாது. கடுஞ்சொற்கள், சொல்லும் நன்மையைக் கெடுத்துவிடும்.