பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



73



‘சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.’

98

கேட்பவருக்கு மனவருத்தம் தராத சொல், இம்மையும் மறுமையும் இன்பம் தரும்.

1. யாருக்கும் (பகைவருக்கும்கூட) மனவருத்தம் தராத சொற்களாகச் சொல்லுதல் வேண்டும்.

2. சொல்லும் சொல்லளவிலும், பொருள் அளவிலும் மற்றவர்க்கு மனவருத்தம் தராதவாறு சொல்லுதல் உயர்ந்த பழக்கமாகும்.

3. “நல்லதுக்குத் தானே சொல்லுகிறேன்” என்று ஏசக்கூடாது; திட்டக்கூடாது; பழி தூற்றக்கூடாது; வேண்டாதவைகளை நீக்குவதற்கு, துன்புறுத்தாத இனிய முறைகளே நிலையான பயன்தரும்.

‘இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.’

99

இனிய சொற்கள் இன்பம் பயத்தலை அறிந்தும், கடுஞ் சொல்லைச் சொல்லுவதேன்?

1. பிறர் கூறும் இனிய சொற்கள் தன்னிடத்தில் இனிய பயன் தரத்தக்க விளைவுகளை உண்டாக்குவதைத் துய்த்து அறிந்திருப்பவன், பிறரிடத்திலும் இனிய சொற்களாலே பேசி, நன்மைகளை - இன்பங்களை வளர்க்க வேண்டும்.

2. எந்தக்காரணத்தை முன்னிட்டும் எந்தச் சூழ்நிலையிலும் கடுஞ் சொற்களைக் கூறாமல் இனிய சொற்களையே வழங்கினால் அந்தச் சூழ்நிலைகளையும் நல்ல சூழ்நிலைகளாக மாற்றிவிடலாம். எந்தத் தீமையையும் நீக்கி நன்மையை அடையலாம்.