பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒருவருக்குச் செய்த உதவி, அந்த உதவியின் அளவை பொறுத்ததன்று. யாருக்கு உதவி செய்யப் பெற்றதோ, அவர்தம் பண்பாட்டின் அளவுக்கு நிகர்த்தது.

1. ஒருவர் உனக்குச் செய்யும் உதவியைப் பொருளளவில் வைத்து மதிப்புத் தராதே.

2. உதவி யென்பது அளவிற் குறைவுடையதேனும் அதைப் பேரளவினதாகக் கருதுவதே பெருமைக்குரியது.

‘மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.’

106

துன்பக் காலத்தில் தனக்குத் துணையாயிருந்து காத்தவரின் நட்பை நீங்காது போற்றுக. மனத்தில் குற்றமற்றவரது உறவை மறவற்க.

"மாசறுத்தார் கேண்மை” என்றும் பாடம் உண்டு. இங்ஙனம் பாடங்கொள்ளின் அறியாமை நீக்கிய ஆசிரியரின் உறவை மறவாது பேணுக என்பது கருத்து.

1. துன்பம் வந்தபொழுது பெரும்பாலோர் செய்வதறியாது திகைப்பர். மற்றவரும் அந்த நேரத்தில் உதவிக்கு வருவது இயல்பல்ல. இந்த உலகியல்பைக் கடந்து உனக்குத் துன்பக் காலத்தில் துணையாயிருந்து உதவி செய்தவரின் நட்பை ஒரு பொழுதும் மறக்கக்கூடாது.

2. வாழ்க்கையைக் கெடுப்பது அறியாமை. இந்த அறியாமையை அகற்றும் ஆசிரியரின் உதவிக்குக் கைமாறாக ஈடு செய்யக்கூடியது எதுவுமில்லை. ஆதலால், அறியாமை நீக்கிய ஆசிரியனின் உறவை மறவாது பேணிக் காத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமத் துடைத்தவர் நட்பு.’

107