பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



12. நடுவுநிலைமை

‘தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.’

111

நடுவு நிலைமையெனச் சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே நன்று. அது பகை, உறவு, பொது, நட்பு என்னும் பகுதிதோறும் முறைமை தவறாது ஒழுகப் பெறுதல் வேண்டும்.

"தகுதி” எனச் சொல்லப்படும் பண்பு நடுவு நிலைமையேயாகும்.

1. சார்பால், பழக்கத்தால் மனம் உண்மையைக் காண்பதில் ஆராயாது தவறு செய்யக்கூடாது.

2. உறவு, பகை ஆகியவற்றின் காரணமாக நன்றல்லனவற்றை நன்று என்றும் தீதல்லனவற்றைத் தீது என்றும் சொல்லுதல் கூடாது.

3. உதவி செய்தல், வழக்குகளில் முடிவெடுத்தல் இன்னோரன்ன துறைகளில் செயற்படும்போது உறவு, பகை, நட்பு ஆகிய அடிப்படையில் செய்தல் அல்லது செய்தலைத் தவிர்த்தல் கூடாது.

4. நமக்குப் பகைவரேயானாலும் அவருக்கு எதிராக அறமல்லாதனவற்றைச் செய்யக் கூடாது. அவருக்குச் செய்யவேண்டிய நன்மையைச் செய்யாமலும் தவிர்க்கக் கூடாது.

5. ஒருவரிடம் நமக்கு இருக்கிற நட்பு அல்லது உறவின் காரணமாக அவர் செய்யும் அறமல்லாதனவற்றிற்கு உடன் நிற்கக் கூடாது.

‘செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.’

112