பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



83


களுக்கும் வளர்ச்சிக்கும் உரிய வாய்ப்புகளால் மாறுபடும் என்பதே உண்மை. “புகழ்” என்பது முற்றிலும் பொருந்தும்.

நடுவு நிலை நின்று வாழ்தல் மூலம் பலரை வாழ்விக்க வாய்ப்பு உண்டு. அதனால், மரணத்திற்குப் பிறகும் புகழ் நிலவும்; நடுவு நிலை பேணுக.

‘கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.’

115

உலகியலில் வாழ்தலும் கெடுதலும் இல்லாத மரபல்ல; இயல்பாக அமைந்தவை. இவற்றின் காரணமாக நடுவு நிலை பிறழாது நெஞ்சத்தாலும் (நினைவாலும்) பிறழாது வாழ்தலே அறிவுடையோர்க்கு அழகு.

1. வாழ்தல், கெடுதல் என்பன பெரிதல்ல. இவை உலகியலில் அமைந்தவை. நாம் உலகியலை அறிந்து, அறிவறிந்த ஆள்வினையோடு வாழ்ந்தால் கேட்டையும் கூட வாழ்வாக மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். ஆதலால், மாற்றியமைத்துக் கொள்ள கூடிய வாழ்க்கைக்காக நிலையான-நீடித்த ஆக்கத்தையும் புகழையும் தரக்கூடிய நடுவு நிலைமைப் பண்பிலிருந்து நினைப்பாலும் பிறழ்ந்து ஒழுகவேண்டாம்.

‘கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.’

116

தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து நடுவு நிலைமையல்லாத செயல்களைச் செய்ய நினைக்குமாயின் தான் கெடுதல் உறுதி என்பதறிக.

1. நடுவு நிலை தவறிச் செல்ல நெஞ்சம் நினைக்குமாயின் நாம் கெட்டுப்போதல் உறுதி என்பதை உணர்ந்து நடுவு நிலையிலிருந்து பிறழ்தலைத் தற்காப்புணர்வுடன் தவிர்க்க வேண்டும்.