பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலை உடையவர்களும், அறத்தியல்பை இலக்காகக் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்; செயற்பட வேண்டும்; இயங்க வேண்டும்.

‘சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.’

119

நடுவு நிலைமையாவது சொல்லின்கட் சார்பு இல்லாமல் இருப்பதாகும். இப்பண்பு மனத்தின்கண் சார்பு இல்லாது இருந்தால் தான் வந்தமையும்.

1. ஒன்றற்குச் சார்பாக அல்லது எதிரிடையாகப் பேசுதல் என்பது வாழ்வியலில் தவிர்க்க முடியாதது. இயற்கையும் கூட! ஆனால், அப்படிச் சொல்லுவதற்குக் கண்ணுக்குத் தெரிந்த அல்லது தெரியாத மறைமுகமான சார்புகள் ஏதும் இல்லாதிருத்தல் இன்றியமையாதது.

2. புகை படிந்த கண்ணாடி, உருவத்தைத் தெளிவாகக் காட்டாததுபோல், கலங்கிய தண்ணீர் தம்மிடைப் பட்ட பொருள்களைத் தெளிவாகக் காட்டாதது போல், பகை-நட்பு, உறவு-உறவின்மை, தன்னலம் ஆகிய சார்புகளால் தாக்கப்பெற்ற மனம், எது அறம்? எது நன்மை? எது தீமை? என்பதை அறியாது. ஆதலால், நமது மனம் சார்புகளால் தாக்கப்பட்டு அறத்தினை, நன்மையைத் தேர்ந்து தெளிந்து அறியும் இயல்பினை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை யென்றால் பகையும்-நட்பும் உறவும்-உறவின்மையும் இருக்காதா? இருக்க வேண்டாமா? ஆம், இருக்கும்! துலாக் கோலைவிட்டு அளவு காட்டும் நடுமுள் விலகியா போய்விட்டது? துலாக் கோலிலிருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி நடுமுள்