பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிறர் பொருளைத் தம்பொருள் போலவே ஆக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்; இதுவும் கூடாது.

3. காலம், உழைப்பு, பொருள் ஆகிய அனைத்திலும் எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப, திரும்பக் கொடுக்கத் தவறுதல் வாணிகம் அன்று. நெறிமுறை தவறிய வாழ்க்கையுமாகும். ஆதலால், இந்த வாழ்வியலில் நாம் துய்த்து மகிழும் பொருள்களையும் அனுபவங்களையும் வழங்கும் இயற்கை உலகிற்கும், சமூதாயத்திற்கும் நாம் திரும்பக் கொடுக்கும்படி சிறந்த வாழ்க்கை, - அற வாழ்க்கை வாழவேண்டும்.

4. குறிப்பாக வாணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதல் விலை, குறைந்த எடை - அளவு முதலியன செய்தல் தீது. செல்லாக் காசுகளை வாங்க மறுப்பது போலக் கலப்படப் பொருள்களை விற்கவும் மறுக்க வேண்டும்.

13. அடக்கமுடைமை

‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.’

121

அடக்கமுடையராயிருத்தல் பெரும் பயனையும் புகழையும் தரும். மனம், மொழி, மெய் மூன்றாலும், அடக்க முடையராய் வாழ்தலே அடக்கமுடைமையாகும்.

தற்செருக்கின்றி மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மையுடையோரே அடக்கமுடையராய் வாழ்தல் இயலும்.

1. யார்மாட்டும் அடக்கம் உடையராய் வாழ்தல் வேண்டும்.

2. எல்லாரையும் மதிக்கவும் பெருமைப்படுத்தவும் வேண்டும்.