பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்வம் உடையவருக்கு அதுவே வேறொரு செல்வமாய் அமையும்.

பொதுவாகச் செல்வம் செருக்கைத்தரும் இயல்பினது. அதனால், செல்வமுடையார் அடக்கமுடையராயிருத்தல் இயல்பன்று.

செல்வமுடையார் அடக்கமுடையராக இருந்தால் அச்செல்வம் கேடுறாமல் வளரும்; அதனால் அதனை வேறொரு செல்வம் என்றார்.

1. செல்வத்தின் காரணமாகச் செருக்குக் கொள்ளாமல் அடக்கத்துடன் வாழ்க.

2. செல்வத்தின் துணைகொண்டு நினைத்ததை முடிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் செருக்குக் கொள்ளுதல் கூடாது. இங்ஙனம் செருக்குக் கொள்ளாது முயன்றால் நினைத்தது எளிதில் - பெரும்பொருள் செலவில்லாமல் கைகடும்.

3. செல்வமுடையோம் என்ற எண்ணத்தில் ஆடம்பரமாக வாழாதே; ஆடம்பரமான வாழ்வு, மற்றவர் மனத்தில் அழுக்காற்றைத் தூண்டும். அதனால் தீமைகள் செய்வர். செல்வம் அழியும் வாய்ப்புகள் உருவாகும். ஆதலால், எளிய வாழ்க்கையே வாழ்க.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’

126

ஆமையானது, தீங்கு வந்துற்றபொழுது பாதுகாப்பாகத் தனது உறுப்புகளை உள்ளடக்கிக் கொள்ளும். அதுபோல, மனிதனும் தீமை வந்து சாராத வண்ணம் தன் பொறிகளை அடக்கிக் கொள்ளும் ஆற்றல் பெறுவானாயின் எழுமையும் பாதுகாப்பாக அமையும்.