பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



93



ஆமை தன் உறுப்புகளைத் தீமை வந்துற்ற பொழுது அடக்கிக் கொண்டாலும், நேரிய நலம் பயக்கும் இன்பங்களைத் துய்க்கத் தனது உறுப்புகளை வெளியே அமைத்து வாழ்தல் கண்கூடு. அதுபோல ஐம்புலன்களை, பொறிகளை அடக்குதல் என்றால் நுகர்தல் கூடாது என்பதோ அழித்து விடுதல் என்பதோ பொருளன்று.

நல்லற நெறியில் வந்து பொருந்தும் இன்பங்களை ஆர்ந்து துய்ப்பதில் தடையில்லை என்பது பெறப்பட்டது.

1. நம்முடைய உழைப்பால் கிடைக்கும் பொருள்களை நுகர்தலில் தவறில்லை.

2. உழைப்பாலும், உறவு முறை அமைப்புகளாலும் தமக்கே உரியவற்றை மட்டும் நுகர விரும்புக.

3. நுகர்தலை ஆசையாக மாற்றிக் கொள்ளாமலும் இன்றியமையாத் தேவையாக ஆக்கிக் கொள்ளாமலும் நுகர்தல் வேண்டும். துய்த்தலோடு துய்ப்பித்தலும் நோக்கமாதல் வேண்டும்.

4. ஆதலால், விரும்பி நுகர்பவைகள், தேவைகளாக மாறிவிடாமல் தடுக்க இடையிலேயே நோன்புகளின் பெயரால் நுகர்வுகளுக்கு ஓய்வு தருதல் நல்லது.

5. ஆகையால் பொறிகளை உள்ளடக்க இயலாது போனால், பொறிகளுக்கு வேறு நல்ல பணிகளைத் தந்து தீமையைத் தவிர்த்திடலாம்.

6. தீயன விளைவித்திடும் நட்பு, சூழல் ஆகியவற்றைத் தவிர்ப்பதும் துணை செய்யும்.

7. அகநிலையில் வளர்ந்தவர்களே தனித்திருக்க இயலும்; தீய எண்ணங்களின்றித் தனித்திருக்க இயலும். ஆதலால் அகநிலையில் போதிய வளர்ச்சி பெறாத மக்கள் தனித்திருப்பதைத் தவிர்த்து நல்லோருடன் எப்போதும் சேர்ந்திருப்பது நல்லது மட்டுமன்று, தேவையுமாகும்.