பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



95


நட்புணர்வு கொண்டு அவர்தம் குற்றங்களை நேரில் மற்றவர் அறியாவண்ணம் கூறின் குற்றங்கள் நீங்க வாய்ப்புண்டு. ஆதலால், கோள் சொல்லுதல், புறங்கூறுதல், பழி தூற்றுதல் ஆகிய செயல்களைத் தவிர்த்திடுக.

‘ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.’

128

ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின், அவன் சொன்ன பயனுடைய பிற சொற்களும் நல்லன வல்லவாகி விடும்.

1. சிலர் பாராட்டுவர்; போற்றுவர். அங்ஙனம் பாராட்டும் பொழுதே “ஆனாலும்” என்று போட்டுத் தீமையையும் சொல்லி விடுவர். இங்ஙனம் சொல்வதால் - பயனுடையனவும் பயனற்றனவும் கலந்து கூறுவதால்-பயனுடையன, மகிழ்வு தரத்தக்கன பல கூறினாலும் ஒரு தீச்சொல் நம்பிக்கையைக் கெடுத்து, நல்லெண்ணத்தைக் கெடுத்துத் தீய பயன்களைத் தந்துவிடும். ஆதலால், நல்லனவே சொல்லுக! பேசுக! ஒரு தீச்சொல் பல நன்மைகளைக் கெடுத்து விடும். ஆதலால், சொற்களைத் தேர்ந்து பேச்சுக்குப் பயன்படுத்துக!

‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.’

129

ஒருவன், ஒருவனை நெருப்பினால் சுட்ட புண் மருத்துவத்தாலும் காலத்தாலும் ஆறும். ஆயினும் அப்புண்ணினால் ஏற்பட்ட தழும்பு (வடு) மாறாது இருக்கும். ஆனால் ஒருவனை ஒருவன் நாவினால் சுடுதலாகிய கடுஞ் சொல்லையும் பழிச்சொல்லையும் கூறின் அச்சொற்கள்