பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்யும்; உண்ணும் வேட்கையைத் தரும். ஆனால் உண்ண இடந்தராது.

ஓரிடத்தில் எல்லை கடந்த துய்ப்பு இருப்பின் அது பிறிதோரிடத்தில் இயற்கையமைத்த துய்ப்புமின்றிப் பலர் வருந்த வழிவகுக்கும். வருந்துவோர் வாளா இரார். துய்ப்பினை இழந்து துயருறுவோர் துய்ப்போருக்குத் தொல்லை தருவர். ஆதலால் நியதி வழிப்பட்ட துய்ப்புக் கூடத் தடுமாறும்.

செல்வத்தின் பயன் துய்ப்பல்ல. ஒரே பால்வகைக்குள் காதல் தோன்றுதலில்லை. பால் வேறுபட்ட இடத்தில் தான் காதல் அரும்புகிறது; கனிந்த அன்பு கால் கொள்கிறது; ஆங்குத் துய்ப்பித்துத் துய்த்தலே இயல்பான ஒழுக்கமாக அமைந்து விடுகிறது. அவரவர்களே வலிய திட்டமிட்டுத் துய்த்தல் துய்ப்பன்று, அஃதோர் அசுர உணர்ச்சி! அது மனித உலகத்திற்குப் பகை, ஒருவர் துய்ப்பிக்கத் துய்த்தலே ஒழுக்க வழிப்பட்ட துய்ப்பு. இத்தகைய துய்ப்பே நியதி; நீதி! இத்தகைய தூய துய்ப்பே உயிர்க் குலத்திற்கு வாழ்வளிக்கும். வையகத்தையே வானகமாக மாற்றும்.

பிறர் வாழ்வில் தன்வாழ்வை இணைத்துக்கொண்டு பிறரை வாழ்விப்பதன் மூலம் வாழும் இயற்கையொழுக்கம், இன்றும் நற்சாதி விலங்குகளிடமும், நற்சாதித் தாவர இனங்களிடமும் இருக்கிறது. அவை மனிதனைத் துய்ப்பிக்கின்றன. மனிதன் அவைகளை ஊட்டுவிக்கின்றான். ஆனால், மனிதனோ தன்னுடைய துய்ப்புக்குத் தானே பட்டியல் தயாரிக்கிறான்; தேடித்துய்க்கிறான்; மற்றவர்களிடத்திலிருந்து ஒதுங்கித் தன்னைத் தானே பூட்டிச் சிறைப்படுத்திக் கொள்கிறான். மற்றவர்களுக்கு எது பிடிக்கும் என்பது அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் முயற்சியும் அவனுக்குப் பிடிக்காது. இது வாழ்க்கை முறையன்று.

செல்வத்தின் பயன் ஈதல்! இது எவ்வளவு உயர்ந்த தத்துவம்! இந்தத் தத்துவம் சமுதாயத்தில் வாழ்க்கை நெறியாக மலர்ந்திருக்குமானால் சமுதாயத்தில் இவ்வளவு