பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வத்துப் பயன்

93


இருக்கும் இடம் பெரிதாக இருந்தால் இன்று குற்றம் மறைந்து விடுகிறது. இஃதொரு விபரீதமான உலகம்.

நக்கீரனார் காலத்தில் சிறுமையைத் தூற்றுதல், சிறுமையுள் சிறுமையாகக் கருதப் பெற்றது. திருத்தும் முயற்சியின்றித் தூற்ற முயற்சி செய்வது பகைவழிப்பட்டது. நோக்கம் சிறுமை நீங்க வேண்டுமென்பதன்று. தனது பகைவன் அழிக்கப்பெற வேண்டுமென்பதே. நக்கீரனார் குற்றத்தைக் குற்றத்திற்காகவே கண்டவர். குற்றமுடைய கவிதையைச் செய்தவன் கண்ணுதற் பெருமானாகவே இருந்தும் துணிவுடன் ‘குற்றம் குற்றமே’ என்று சாதித்தவர். ஆம், அவருக்குக் கண்ணுதற் பெருமானிடத்தில் ஆகவேண்டியது ஒன்றுமில்லை. புலன்களை வென்று விளங்கிய புண்ணியப் புலவனாக இருந்ததால் கண்ணுதற் பெருமானையும் எதிர்த்து வழக்காடும் ஆற்றல் கிடைத்தது. அவர்தம் வாழ்க்கை எளிய வாழ்க்கை.

உலகம் முழுவதையும் ஒரே குடைக்கீழ் வைத்து ஆளும் உரிமை பெற்றவனுக்கும் மிகச் சாதாரணமான ஒரு மனிதனுக்கும் துய்க்கும் வாழ்க்கை ஒரே வகையானதே. அதாவது உண்பது நாழி அரிசிச் சோறு; உடுப்பன இரண்டு துணி. இந்த வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. ஆயினும் இந்த அறிவினைப் பெறாதவர் பலர். மேலும் மேலும் செல்வத்தை இவறிக்கூட்டிச் சேர்க்கின்றனர். அங்ஙனம் சேர்ப்பது ஏன்? என்று நக்கீரர் கேட்கின்றார். திருவள்ளுவரும், கோடி தொகுக்கலாம். ஆனால் துய்த்தலரிது என்றார். பிறர் உழைப்பில் செல்வத்தைச் சேர்த்தல் பாவம். சேர்த்த செல்வத்தைத் தாமே துய்த்தல் கொடிய பாவச் செயலாகும்.

இன்றோ மனிதனின் தேவைகள் சிறகடித்துப் பறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. அம்மம்ம! பழங்காலத்தில் “கூழுக்கு உப்பு இல்லை என்பாரும் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பாரும்” என்று வறுமைக்கு எல்லைக்கோடு கட்டினார். ஜீவா, சற்று வளர்ந்து ‘காலுக்குச் செருப்பில்லை’