பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று வறுமைக்கு எல்லை கட்டினார். ஆனால் இன்றைய தேவை எல்லை பெருகி வளர்ந்திருப்பதால் வறுமையின் வடிவங்கள் மாற்றப் பெற்றுள்ளன. “படம் பார்க்கக் கையில் பணம் இல்லை; காருக்குப் பெட்ரோல் இல்லை” என்றெல்லாம் வறுமையின் எல்லைக்கோடுகள் உருமாறி வளர்ந்துள்ளன. இந்த வளர்ச்சி நேரியதன்று.

துய்க்கும் வேட்கை மீதூர மீதூர மனிதனின் தன்னலம் விரிவடையும். தன்னல எல்லை விரிவடைவதன் மூலம் பிறருடைய துய்ப்பு நலன்கள் ஆக்கிரமிக்கப்படும். அதன் காரணமாக அழுக்காறு வளர்ந்து பகை கால்கொண்டு செல்வத்தைப் பறிப்போர் தோன்றுவர். தேடிய செல்வத்தைத் துய்த்து மகிழ்தலைவிட மற்றவர்க்கு வழங்கித் துய்ப்பித்து மகிழுதல் பேரறம். துய்த்தலே நாகரிக வழிப்பட்டது. எந்த ஒன்றையும் தானே துய்ப்பது நாகரிகமன்று. அத்துய்ப்பும் நஞ்சாக மாறும். பிறர் அன்பின் நெறி நின்று துய்ப்பிக்கத் துய்த்தலே இன்ப அன்பினை வளர்க்கும்; துய்த்தலும் அமுதாகும். அதனாலன்றோ இயற்கை, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஊட்டுவோரையும் உண்பிப் போரையும் ஒன்றாகச் சேர்க்கிறது. நக்கீரனார், “அளவின்றி ஆசைப்பட்டுக் கோடி சேர்த்தாலும் உண்பது நாழிதானே; ஏன்? ஊரையழித்து உலையில் போடவேண்டும்” என்று கேட்கிறார். அதுமட்டுமின்றி வாழ்க்கையின் தேவை உண்பது நாழியாக - உடுப்பது இரண்டாக நெறிமுறைப்படுத்தப் பெறுமாயின் ஆடம்பரம் குறையும். ஓரிடத்து ஆடம்பரமாகச் செலவழிக்கப் பெறுவது பிறிதோரிடத்தின் உணவேயாகும் என்று எண்ணினால் வாண வேடிக்கை காட்ட மனம் வருமா?” என்றும் அறிவுறுத்துகிறார். ஏன்? தான் துய்த்தலுக்காகச் செல்வமல்ல, ஈதலுக்காகவே செல்வம் என்று தேற்றேகாரம் கொடுத்துக் கூறும் பொன்னுரை இன்றைய சமுதாய வாழ்க்கையில் பொருள் பொதிந்தது. செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேன் எனினே தப்புத பலவே!” என்ற வாக்கு நம் வாழ்க்கையில் அமைவதாக!