பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதை விளக்கம்

99



2. அங்ஙனம் வறியோர் யாசிக்கின்றபொழுது யாசிக்கப் படுகிறவர்கள் இல்லை எனச் சொல்லுதல் அதனினும் இழிவு.

3. தன்னுடைய துன்பத்தை வந்து கூறி கேட்பதற்கு முன்னமே குறிப்பறிந்து கொடுப்பது மிக உயர்ந்த கொடை

4. அங்ஙனம் குறிப்பறிந்து கொடுக்கின்ற பொழுது அதனைக் கொள்ளேன் என மறுத்தல் அதனினும் உயர்ந்தது.

5. கடல் பரந்த நீர்ப்பரப்பை யுடையதாயினும் அது பருகுவதற்குத் தகுதியில்லாமல் உப்பு நீராக இருப்பதால் தண்ணீர் விரும்பும் மக்கள் அதனை நாடிச் செல்வதில்லை. அது போலவே பெரும் செல்வராயினும் பிறருக்குக் கொடுத்து வழங்காத, ஈதல் பண்பில்லாதவன் நெஞ்சம் உடையார் மாட்டு மக்கள் செல்வதில்லை.

6. அளவிலும் நீர்ப்பரப்பிலும் சிறியதாகி, சேறு கலந்த நீரை உடையதாயினும் பருகுதற்குரிய நீரையுடைய தகுதி குளத்திற்கு இருத்தலின் மக்கள் அதனை நாடிச் செல்வர். அதனால் அச்சிறியநீர் நிலைக்குக்கூட செல்கின்ற வழிகள் பலவாகும்.

7. தான் விரும்பிய ஒன்றைக் கொடுக்காதவரைப் பழித்தல் சால்புடைய பழக்கமன்று. அதற்குப் பதிலாகத் தம்முடைய காலத்தையும் மற்றையவற்றையும் நொந்து கொள்வதே முறையாகும்.

8. வழங்காத வரையும் வாழ்க என வாழ்த்துகின்ற பேருள்ளம் வேண்டும். என்று இக்கவிதைகளின் அறக் கருத்துக்களை வகுத்துப் பிரித்து படிக்கின்றபொழுது எவ்வளவு அருமையான கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்று விளங்கும். மழை பொழிகிறது. மழை பொழிந்து ஓய்ந்தபோதுகூட மரங்களின் அடியில், இலைகளிலிருந்தும், கிளைகளிலிருந்தும் நீர்த்துளிகள் விழுவது ஓய்வதில்லை. அங்ஙனம் மழை ஓய்ந்தும் நீர்த்துளிகள் ஓயாது விட்டு விட்டு விழுந்து கொண்டிருப்பதனால் புள்ளும்