பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

105


தன்மையுடைய வீரம் கூடப் பல சமயங்களில் மண்ணாள்வோருக்கு வந்துவிடுவது உண்டு. ஆனால் கரிகாலன் குடிமக்கள் நலன் நாடும் பேரரசாகவும் விளங்கினான்! கல்லணைக்கட்டி நீர்ப்பாசன வசதிகளை முறைப்படுத்தினான்.

வாழ்க்கையில் தோல்விகளைத் தரக்கூடிய ஆற்றல் பகைக்கு இல்லை; இருக்க முடியாது. அசைவில்லாத - நடுக்கம் இல்லாத - சோர்வில்லாத ஊக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பதைச் சிலப்பதிகாரத்தால் உணரலாம்!

........
“இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமாவளவன்
..........
அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதுஇப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு”

(சிலப். 5: 89-98)

என்னும் சிலப்பதிகார வரிகள் எண்ணத்தக்கது.

அறிந்தவர் கடமை

வாய் படைத்தோரெல்லாம் பேசுகின்றனர். பொருள்களைச் சமைத்துச் சுவைத்து உண்ணக் கற்றுக் கொண்ட சமுதாயம், உணர்வுகளைச் சமைத்துக் கொண்டு இனிய சொற்களைக் கூறக் கற்றுக் கொண்டபாடில்லை.

பேசுவதெல்லாம் பேச்சா? சொல்லுவதெல்லாம் சொல்லா? “வறுமை என்றது செல்வத்தில் மட்டுமல்ல; சொற்களிலும் கூட உண்டு” என்பார் இளங்கோவடிகள். “வறுமொழியாளர்” என்று குறிப்பிடும் சிலம்பு.