பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொற்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! சபித்துவிடுகிறார்!

மாதவத்தராகிய கவுந்தியடிகளுக்கு, மனைத்தவத் தாளாகிய கண்ணகி நெறியுணர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கவுந்தியடிகள் பிறழ்ந்தது கோவலன் - கண்ணகி மீதுள்ள பரிவினாலேயே! இயல்பாகச் சினம் கொள்பவரல்லர், இன்றைய சமுதாய வாழ்க்கையில்,

நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறிதல் வேண்டும்

(சிலப் 10: 237-238)

என்ற கண்ணகியின் அறிவுரை முற்றாகக் கொள்ளத்தக்க அறிவுரையாகும்.

திரிந்த கோலும் திரிந்த நிலமும்

அரசியல் ஓர் அறம், அரசியல் முறைகள் மனித குலத்துக்கு மறைமொழி போலப் பேணத் தக்கன. அரசியல் நிலத்திற்கு நீர் போல; உடலுக்கு உயிர் போல; பெண்ணிற்குக் கற்புப் போல மனித குலத்திற்கு இன்றியமையாதது. சிறந்த ஆட்சி தனிமனித ஆவல்களுக்கு, ஆர்வங்களுக்கு எதிராக அமையாது. ஆனால் அந்த ஆவல்கள், ஆர்வங்கள் நெறிமுறைப்படி அடையத்தக்கன என்று நெறிப்படுத்தும் - முறைப்படுத்தும்.

சிறந்த ஆட்சி முறை, தனிமனிதனுக்குச் சமுதாய உணர்வுகளையும் உறவுகளையும் வளர்த்துத் தரும். சமுதாய மோதல்களைத் தூண்டாது; வளர்க்காது. சிறந்த ஆட்சி நிலவும் நாட்டில் உள்ள மக்கள், அரசின் உறுப்புக்களாகத் தங்களை எண்ணுவர்; அரசை ஏமாற்ற மாட்டார்கள். அரசும் மக்களை வஞ்சிக்காது; ஏமாற்றாது.

அரசியல் அறம் முறைப்படி நிகழுமாயின் நாட்டில் வளம் பெருகும்; வறுமை இருக்காது; அமைதி நிலவும்;