பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

109


கலகங்கள் நடைபெறா உழைப்பு உயர்தவம் என்று போற்றப் பெறும்; உற்பத்தி பெருகும். வல்லோராயினும் வரையறைக்கு உட்படுத்தப்படுவர்; மெலியோர் நலியார்; எங்கும் இன்பம் தழுவிய ஆக்க வழியிலான சமூக உறவுகள் நிலவும் கால்கொள்ளும்.

அரசு, மனித குலத்தின் அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்தி வளர்க்கும்; வழிப்படுத்தும். அரசின் கடமை, தவறுகள் குற்றங்கள் நிகழாத-செய்வதற்குரிய அவசியம் ஏற்படாத சமுதாயத்தைக் காண்பதேயாம். அரசு சமுதாயத்தை வளர்க்கும் சாதனமேயாம். அதற்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு. ஆயினும், அது கடைசி ஆயுதம்தான்! இத்தகைய நல்லரசை மனிதகுலம், அரசியல் சிந்தனைக் காலத்திலிருந்து பெற்றதா? இல்லவே இல்லை!

ஆட்சி செய்தல் பொறுப்புள்ள பணி. இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு மனிதச் சிந்தனை போதுமானதன்று. ஏன்? ஒரு நிகழ்வை அணுகும் முறையிலும் அளந்தறியும் வகையிலும் ஒரு மனிதர் தவறுதல் கூடும். அதனால், முன்னாளில் அரசர்கள், அமைச்சர்களுடன், ஐம்பெருங்குழுவுடன், எண்பேராயத்துடன் கலந்துபேசி முடிவெடுத்துச் செயற்படுதல் என்ற முறை இருந்தது.

காலப்போக்கில் கலந்தறியும் இயல்பு இல்லாமல் போயிற்று. ஒரோவழி யிருந்தாலும் கலந்தறியும் பணிக்குத் துணையாகாதவர்கள் சார்புகள் உடையவர்களானார்கள். அதனால் கலந்தறிதல் போதிய பயன்தரவில்லை.

அரசு முறையில் “ஒருமனிதமுறை” மேவியதால் மனிதகுலம் பயனடையவில்லை என்ற மனக்குறையில் பலர் கூடி ஆட்சி செய்யும் மக்களாட்சி முறையைக் கண்டனர். ஆயினும் இன்றுவரை செழிப்பான - முறையான மக்களாட்சியைக் காண இயலவில்லை. மக்களாட்சி