பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

121


தேவை. இந்த நூற்றாண்டில் பெருமையும் புகழும் கற்பிதத்திற்குரியன, இயல்பானவையல்ல, உழைத்துப் பெறக்கூடியன அல்ல என்பது படிப்பினை! எனினும் இது தவறு.

சான்றாண்மையுடையவர்கள் பெருமைக்குரிய குணங்களை உடையவர்கள் மட்டுமல்லர்; அக்குணங்களை வாழ்க்கையிற் செயற்படுத்துபவர்கள். இவர்கள் பொய்யை நிந்திப்பதுடன் நிற்கமாட்டார்கள்; உண்மையைச் சாதித்தும் நிற்பார்கள்.

இவர்கள் மனத்தில் உயிர்க்குலத்தினுடைய வேற்றுமைகளை வளர்க்கும் வெறுப்புணர்ச்சி இருக்காது. ஒருமையுணர்வு ஊற்றத்துடன் வெளிப்படும்.

உயிர்க் குலத்தை அழிக்கும் இனப்பகையான மொழி வேற்றுமை, சமய வேற்றுமை முதலியவற்றைச் சான்றோர் எனப்படுபவர், உளமார வெறுப்பர். கடைகோடி மனிதரின் உரிமைக்கும் வழக்காடிப் பாதுகாப்பர்; வாழ்வளிப்பர்.

நாடாளும் கொற்றமேயானாலும் அஞ்சாது, தவறு கண்ட போது எடுத்துக் கூறுவர் இடித்துக் கூறுவர்; திருத்தமுறும் வகையில் போராடுவர். இவர்களே சான்றோர். இத்தகு சான்றோர்கள் உள்ள நாட்டில் நல்ல அரசு அமையும். மக்கள் உரிமைகள் பாதுகாப்பாக அமையும்.

கோவலன் முறை கேடாகக் கொல்லப்பட்டதால் அரசு நல்ல அரசல்ல! அதனால் அந்த நாட்டில் சான்றோர்கள் இல்லை என்ற முடிவுக்கு வருகிறாள் கண்ணகி! அதனால், “சான்றோரும் உண்டு கொல்!” என்று கேட்கிறாள்!

அன்று கண்ணகியின் வினாவிற்கு விடை கிடைக்கவில்லை. அதே வினாவை இன்றும் பலர் கேட்கின்றனர்! விடைதான் கிடைத்த பாடில்லை! என்றுதான் கிடைக்குமோ..?