பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


பரிபாடலின் பக்திநெறி பற்றிப் பேசினாலும், பாரதியின் பக்திமைபற்றிப் பேசினாலும் பக்திநெறியில் அடிகளின் பார்வை புதியது. ‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ என்கிற கோட்பாட்டை நாமார்க்கும் குடி அல்லோம் என்னும் நாவுக்கரசரின் குரலை சுதந்திரக் குரலாக எடுத்துரைப்பார். விடுதலை வேள்விக்கு வித்திட்டவர் என வீறார்ந்த மரபை விளக்கிக் கூறுவார்.

கடவுட் பற்றும், கவிதைப் பற்றும், கட்சிசாரா நாட்டுப் பற்றும் அடிகளார் எழுத்துக்களில் எங்கும் பரக்கக் காணலாம். பாரதியாரை ப. ஜீவானந்தம் ஆரவாரமாக, உணர்ச்சி பொங்கச் சொல்லிக் கூத்தாடுவார், அடிகளாரோ ஆரவாரமின்றி ஆழ்ந்த அமைதியோடு அழகு தமிழில் ஆற்றொழுக்காக எடுத்துரைப்பார். இவர் எழுத்து நடை திரு.வி.கவைப் போல பேச்சு நடை தழுவியது. சிறிய தொடர்கள் சிந்தனையைத் தூண்டுபவை.

ஒட்டுமொத்தமாக எழுத்துக்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்கிறபோது அடிகளாரின் அறிவாற்றலும், எழுத்தாற்றலும், தமிழாற்றலும் நம்மை வியப்படையச் செய்கின்றன. ஒரு நொடியும் வீணாக்காது தமிழினம் உய்ய அடிகள் ஆற்றிய அரும் பணிகளின் ஆழத்தையும், அகலத்தையும் விரிவையும் இந்நூல் வரிசைகள் விளக்குகின்றன. உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.