பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

141



ஊழின் இயல்பு

பற்றுக்கள்-ஆசைகள் ஊழின் வினைபுலன்களாகும். பற்றுக்களை விடுதலே ஊழை வெற்றி பெறும் வழியாகும். பற்றை விடுதல் என்பது நுட்பமான தத்துவம். செல்வத்தை விரும்புதல், ஈட்டுதல், தொகுத்தல், துய்த்தல் ஆகியன பற்று ஆகா.

ஆனால் செல்வத்தை ஈட்டும்பொழுது மற்றவர்களுக்குத் துன்பம் தந்து ஈட்டுதல் பற்று ஆகும். செல்வத்தின் பயன்களாகிய ஈதல், துய்த்தல் ஆகியன இன்றிச் செல்வத்தைச் செல்வத்திற்காகவே ஈட்டிப் பாதுகாத்தல் பற்று ஆகும். இத்தகைய பற்று ஊழாக மாறும்.

ஒருத்தியை மணந்து, காதல் வாழ்க்கை வாழ்தல் பற்றாகாது. ஆனால், காதல் வாழ்க்கையின் இலக்கணமாகிய இன்புறுத்தலின் வழி இன்புறுதல் என்ற நெறி பிறழின் ஊழ் விளையும்.

பணி செய்தல், தொண்டு செய்தல் பற்றன்று. ஆனால் பணிகளை, தொண்டுகளை, புகழ் கருதியும், நன்றியினை எதிர்பார்த்தும், கைம்மாறுகளை எதிர்பார்த்தும் செய்தால் பற்று ஆகும்; ஊழ்விளையும். பணிகளைப் பணிகளுக்காகவே மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே செய்தால் ஊழன்று.

அதாவது செய்யும் காரியங்களின் நோக்கம் தற்சார்புடையதாக மட்டுமே விளங்குவதும், வெறித் தன்மையுடன் துய்க்கும் இன்ப துன்ப உணர்வுகளும் ஊழாக விளையும். இன்பத்தை ஈடுபாட்டுடன் ஆவலுடன் துய்த்தால் ஊழ் விளையும்.

தவிர்க்க முடியாதன போலவும், கடமைப்பாட்டுணர்வுடனும், இன்பங்களைத் துய்த்தல், தவறன்று; ஊழாகாது.