பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

151


உணர்ந்தால், பழக்கங்கள் தவிரப் பழகும் இயல்பிருந்தால், ஊழை வெற்றி காணலாம் என்ற உண்மை புலப்படும்.

கோவலன், ஊழின் வலியால் உந்திச் செலுத்தப்படுவதாக இளங்கோவடிகள் கூறும் இரண்டாவது இடம் கனாத்திறம் உரைத்த காதை, கோவலன், மாதவியைப் பிரிந்தவுடன் மாலைப் பொழுதில் கண்ணகியைக் காண வருகிறான். கண்ணகியைக் காணும் தருணத்தில் கோவலன் தன்னுடைய சென்ற கால நடத்தைகளை எண்ணி வருந்தி, அதனால் தன்னை வறுமை வந்தடைந்தது என்று. நாணுகிறான். இதனைக் கோவலன்,

“சலம்புணர் கொள்கை சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நானுத் தருமெனக்கு”

(சிலம்-கனா 67-71)

என்று கூறுவதனால் அறியலாம். கோவலன் சொன்னதை ஆராய்ந்தால் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உரியனவாம்.

ஒன்று, குலம்தரு வான் பொருள். அதாவது பரம்பரைச் சொத்து. கோவலன் தோன்றி, அரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைத்துப் பொருள்களை ஈட்டியிருப்பானாகில், அவன் அந்தச் செல்வத்தின் அருமையை அறிந்து செலவழித் திருப்பான். அந்த வாய்ப்பு அவனுக்கில்லை.

உழைப்பையும், முயற்சியையும் சுவைத்து வாழும் தகுதி மிகுதியுடைய ஒழுக்க நெறி வாழ்க்கை, கோவலனுக்கு இல்லாமற் போய்விட்டது. அதனால் அவனுக்குச் செலவழிக்கத் தெரிந்ததே தவிர, ஈட்ட வேண்டும் என்ற உணர்வில்லை. கோவலனின் செல்வம் செலவழித்ததால் மட்டுமே அழிந்தது என்று கருத முடியாது. செல்வம் நுகர்தல் வழி, செலவழித்தலுக்குரியது தானே! அதனால் செல்வம் அழியும் என்று கூறுதல் பொருளியல் கொள்கையன்று. செல்வம் தொடர்ந்து ஈட்டப்படாது போனால்தான் அழியும்.